New
Perth Murugan News
Events
Services
Youth Circle
Useful Links
Education Seminar
Management Team
Our Timing
Listen Mantra
Click Here to View



Perth Bala Murugan
News
 

கார்த்திகை தீபம் ஏற்றும் முறைகள்

 

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

தீப லட்சுமி துதி

1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே

ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.

2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே

எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே… எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.

3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ

எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும் சேரும். (விபூதி என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு). அவர் வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள்.

4. கீடா: பதங்கா: மசகாச் ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:

நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதிலட்சுமியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை அவள் எனக்கு அளிக்கட்டும்.

திருவிளக்கே! திருவிளக்கே!

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.

விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:

திருவிளக்கு பூஜை விதிமுறை

* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
விளக்கு பூஜை மாத பலன்

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.
சித்திரை – தானிய வளம் .
வைகாசி – செல்வச்செழிப்பு.
ஆனி – திருமண பாக்கியம்.
ஆடி – ஆயுள்பலம்.
ஆவணி – கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி – கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி – நோய் நீங்குதல்
கார்த்திகை – புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி – ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை – எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி – துன்பம் நீங்குதல்.
பங்குனி – ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்.

கார்த்திகை பெண்களை போற்றும் நன்னாள்

நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.

சிவசக்தி தீபம்

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

திருவிளக்கில் தேவியர்

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?

சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

பழமையான விளக்கு திருவிழா

திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இந்த வழிபாட்டை கார்த்திகை விளக்கீடு என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றி சம்பந்தர் பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, அவர் விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய் என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.

பொட்டு வைக்கும் முறை

வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

மனநிம்மதி தரும் விளக்கு

வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்

ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்

விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும் உண்டாகும்

எந்த திசை என்ன பலன்

கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு – கடன், தோஷம் நீங்கும்
வடக்கு – திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

விளக்கு துலக்க நல்ல நாள்

குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

விளக்கு துலக்கும் நாள்பலன்

* ஞாயிறு- கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
* திங்கள்- மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
* வியாழன்- குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
* சனி- வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

இவர்களுக்குரிய எண்ணெய்

விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி – பசுநெய்
குலதெய்வம் – வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் – நல்லெண்ணெய்
அம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்

நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு

கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.

தீப ஜோதியே நமோ நம!

இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.

ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப – தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் – கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் – விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் – பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.

 

ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

                          

 
Website designed and maintained by ms websolution websolution.com
Online PayPal FaceBook Twitter